2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ் / லிஸ்டின் ஸ்டீபன்
இயக்கம் : டிஜோ ஜோஸ் ஆண்டனி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு : நிவின்பாலி, தியான் சீனிவாசன், அனஸ்வரா ராஜன், ஷைன் டாம் சாக்கோ, சலீம்குமார், தீபக் ஜெதி
வெளியான தேதி : 1 மே 2024
நேரம் : 2 மணி 38 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.5/5

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் போலி என்கவுன்டரை மையப்படுத்தி வெளியான ஜன கன மன என்கிற படத்தை இயக்கி பரபரப்பை ஏற்படுத்திய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியாகி உள்ளது. அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டி உள்ளதா ? பார்க்கலாம்.

எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் தனது நண்பன் தியான் சீனிவாசனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டும், அரசியல் கட்சி ஒன்றுக்காக வேலை பார்த்துக் கொண்டும் பொழுதைப் போக்கி வருபவர் நிவின்பாலி. ஒரு முறை தீபாவளி பட்டாசை இஸ்லாமிய சிறுவர்கள் இரண்டு பேர் வெடித்து மகிழ, அன்றைய தினம் கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வென்றதால்தான் சிறுவர்களது தந்தை பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார் என தவறாக நினைத்து அதன் மூலம் ஊருக்குள் மிகப்பெரிய கலவரத்தையே உருவாக்கி விடுகிறார் தியான் சீனிவாசன். அவரது திட்டம் குறித்து அறியாமல் இதில் தானும் சிக்கிக் கொள்கிறார் நிவின்பாலி. இதனால் கோபம் கொண்ட இஸ்லாமியர் கும்பல் தியான் சீனிவாசனை தாக்கிவிட்டு நிவின்பாலியை தேடுகிறது. இதை அறிந்த அவரது சித்தப்பா அவசர அவசரமாக அவரை துபாய்க்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

அங்கே சென்ற பிறகுதான், தான் வந்திருப்பது பாலைவனத்தில் ஒட்டகங்களை பராமரிப்பதற்காக என அவருக்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, அங்கே ஏற்கனவே இருக்கும் பாகிஸ்தானிய பணியாளர் ஒருவர் இவரை மிரட்டி உருட்டி அடித்து வேலை வாங்குகிறார். ஊருக்கு திரும்பலாம் என நினைத்தால் சரியாக அந்த நேரத்தில் லாக் டவுன் போடப்படுகிறது. வேறு வழியின்றி அங்கேயே வேலை பார்க்க துவங்கினாலும் போகப்போக இருவருக்குள்ளும் ஒரு நட்பு உருவாகிறது. பாகிஸ்தானில் உள்ள தனது மனைவி, மகளை சந்திக்க அந்த பாகிஸ்தானி கிளம்ப தயாராகும் வேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்.

சிறுவயதிலேயே மகனை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பறிகொடுத்த அந்த தந்தை மகளின் படிப்பு ஒன்றே எதிர்காலம் என நினைத்து சம்பாதித்து வந்த நிலையில் அவரது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற பாகிஸ்தான் கிளம்பி செல்கிறார் நிவின்பாலி. அந்த மனிதரின் கடைசி ஆசையை நிறைவேற்றினாரா ? பாகிஸ்தானில் அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன ? அதன் பிறகு நிவின்பாலியின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

வேலை வெட்டிக்கு செல்லாத தண்டசோறு என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு வெகு பொருத்தமாக பொருந்தி இருக்கிறார் நிவின்பாலி. ஊருக்குள் ஏதாவது வம்பிழுத்து பிரச்சனையை கொண்டு வருவதாகட்டும் அதன்பின் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொண்டு பாலைவனத்தில் ஒரு பாகிஸ்தானிய வேலையாளிடம் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவதாகட்டும்.. எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் அந்த கதாபாத்திரமாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார் நிவின்பாலி. திடீரென எதிர்பாராமல் அவர் மேற்கொள்ளும் பாகிஸ்தானிய பயணம் அவரது கதாபாத்திரத்தின் பக்குவத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஜாடிக்கேத்த மூடியாக கிராமத்தில் அவருடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார் தியான் சீனிவாசன். இவர்கள் இருவரும் வரும் காட்சிகளும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் கவுன்ட்டர் வசனங்களும் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவுகின்றன.

கதாநாயகியாக வரும் அனஸ்வரா ராஜன் கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு படத்தை பார்த்தாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அந்த அளவிற்கு தான் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இடைவேளைக்கு பின் கிட்டத்தட்ட நிவின்பாலிக்கு இணையாக படம் முழுவதும் பயணிக்கும் பாகிஸ்தானி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் தீபக் ஜெதி, தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ஆரம்பத்தில் அவரை பார்க்கும்போது ஒரு விதமாகவும் போகப்போக அவருடன் இணைந்து பயணிக்கும் காட்சிகளில் வேறு விதமாகவும் நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வைக்கும் விதமாக நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக இறுதிக்காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார். காமெடி நடிகர் சலீம் குமாரை பெயரளவுக்கு பயன்படுத்தி வீணடித்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் சுதீப் எலமோன் இடைவேளைக்குப் பிறகு நாமும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை இடைவேளைக்குப் பிறகுதான் தனக்கு வேலை என்பது போல பயணித்திருக்கிறது.

ஒரு கிராமத்து காமெடி டிராமாவாக ஆரம்பித்து, அதன்பின் ஒரு சர்வைவல் பாதையில் பயணிக்கிறதோ என நினைக்க வைத்து போகப்போக அப்படியே ஒரு பீல் குட் படமாக மாறிவிடுகிறது. இதற்கு முன்பு பரபரவென ஒரு கதையில் படம் கொடுத்துவிட்டு அதற்கு முற்றிலும் மாறாக இப்படி ஒரு மெதுவான திரைக்கதையுடன் பயணித்து இருப்பது தான் இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனிக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது. குறிப்பாக இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் கதையே ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.

இன்னொரு ஆடு ஜீவிதம் படமாகி விடுமோ என நினைக்கும் வேளையில் நல்ல வேளையாக பாதையை மாற்றி பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். நிவின்பாலிக்கும் பாகிஸ்தானியருக்குமான காட்சிகள் ஏற்கனவே பிரித்விராஜ் நடிப்பில் வெளியான பிக்கெட் 43 படத்தை ஞாபகப்படுத்துகிறது. பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட பயண காட்சிகள் மிக நேர்த்தி. அதேசமயம் இந்தப் படத்திலும் சமூகம் சார்ந்து, மதம் தாண்டிய மனிதநேயம் பற்றி சரியான நேரத்தில் பேசியதற்காக இயக்குனரை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம்.

மலையாளி பிரம் இந்தியா : பட்டை தீட்டப்படாத வைரம்

 

பட குழுவினர்

மலையாளி பிரம் இந்தியா (மலையாளம்)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓